இஸ்லாமிய மார்க்கம்

ISLAM

பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி

ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட் டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்ட ளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்) எனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்தி லும் (மையவாடியிலும்) கப்ரு கட்டக் கூடாது.

மரணித்துப் போன ஒரு மனிதனின் பெயரால் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கப்று கட்டுதல் நாளடைவில் அதனையே வணங்கக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் கேட்டு பிரார்த்திக்கக் கூடிய நிலை வந்துவிடும். அல்லாஹ்வை மறந்துவிட்டு கபுரடியில் மண்டியிடக் கூடிய நிலை உரு வாகிவிடும். இந்த நிலை நூஹ் நபியுடைய சமுதாயத்திற்கு ஏற்பட்டபோதுதான் அல்லாஹ் அதனை கண்டித்து பிரசாரம் செய்வதற்கு நூஹ் நபியை அனுப்பி வைத்தான்.

வத் சுவா யஊஸ் யஹூக் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நிiவு சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் கப்ரிலுள்ளவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி)

யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத் தில் மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக் களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.

நபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீதுபோடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல்: முஸ்லிம்

இன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளி வாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பண்ணீர் தெளித்து ஊது பத்தி பற்றவைத்து சாம்பரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடாத்துகிறார்கள். அல்லாஹ்வின்தூதரின் எச்சரிக்கையையும் பொறுப்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.

எனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களில் இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியாயின் நபி (ஸல்) அவர்களின் கப்று மட்டும் மஸ்ஜிதுந் நபவியில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன சிலர் கேட்டு பள்ளியில் கப்று கட்டவதை நியாயப்படுத்துகிறாரக்கள். இதற்கான பதிலை எமதுமஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா? என்ற கட்டுறையை பார்வையிடவும்.

MOBILE PHONE 


செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ ரம்லா

Articleகாலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

BUSSINES TECHNIC


 

வியாபார நுணுக்கங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை M.F.ஷேக் முஹையிதீன்

Articleசுத்தம் 
சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.

வரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந்தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.

தொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்புடைய சாதனங்களைப் பரிந்துரை செய்ய வேண்டும். உதாரணமாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியாபாரத்தில் நல்ல பலன்களை கொடுக்கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கையாளர் புறப்பட தாயாராகும் போது, எங்கள் நிறுவனத்தில் தாங்கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வாடிக்கையாளருடன் நல்ல நட்புறவு ஏற்படின் அவர்கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்களை அழைத்தால் வியாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறிமுகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக இருக்கும்.

மேலும், விழாக்காலங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரியப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுடைய பண்டிகை மற்றும் விழாக்களிலும் மறவாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர்கள் மத்தியில் உயரும்.

உண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ணம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் காலாவதி ஆகின்ற தேதிகள் பொருள்களின் மேலோ அல்லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக்கும். அவைகள் தெளிவாக தெரியும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகைப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கையாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.

ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரும்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப்படியாக விலை உயர்ந்த பொருட்களை காட்ட வேண்டும். விற்பனையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறையிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்.

மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன்மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முயற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவருக்கு தெளிவுபடுத்திவிடும். உதாரணமாக ஒரு புத்தகத்தை விற்பனை செய்கின்றார் என்றால் அவர் இப்படிக் கூற வேண்டும்!

‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங்கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.

விளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருள்களை அவர்களுக்கு நினைவு படுத்துவதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக்கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக்குத் தேவையல்லவா? இவற்றை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாசகம் எழுதப்பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒருவியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.

விளம்பரத்தின் நோக்கமே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அதிகமான பொருள்களை விற்பனை செய்வதேயாகும், ஒரு விளம்பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமேயன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்பரம் ஒன்றைச் செய்ய நினைத்தால் அவர் தனக்கு விருப்பமான விஷயங்களை கூறாது மற்றவர்களுக்கு விருப்பமானதையே கூற வேண்டும். விளம்பரம் என்பது சுருக்கமாகவும் சுவாரஸ்யத்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண்டும். பொருள்கள் பற்றிய படங்களுடன் கண்கவர் விதத்தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற்களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

கொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்திற்கு நேரடியாக பணம் கொடுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடியும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட்டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலைக்கு கொடுக்கலாம்.

மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யுமுன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவதுதான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல்
பொதுமக்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த கடைக்கு சென்றால் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று மக்கள் நம்பி வருமாறு செய்து கொள்ள வேண்டும். ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்றால் அதனை வேறு கடைக்கு ஆள் அனுப்பி வாங்கி கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்தால் வருங்காலத்தில் மதிப்புள்ள வாடிக்கையாளர்களை சேர்த்து தரும். ஒரு நூதனமான பொருள் சந்தைக்கு வந்திருப்பின் எல்லோருக்கும் முன்பாக சிறிது கொள்முதல் செய்து அவற்றை தம்முடைய வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து அதை வாங்குமாறு செய்ய வேண்டும்.

மேலும், விற்கப்பட்ட பொருள்கள் பழுது ஏற்பட்டு வாடிக்கையாளர் திரும்ப வந்து அதை கூறும் போது, இன் முகத்துடன் பெற்றுக் கொண்டு மாற்றுப் பொருள் கொடுப்பின் அவர் மகிழ்ச்சியடைந்து பலரிடம் இதைப்பற்றி கூறி நமக்கு நல்ல பெயரையும், புது வாடிக்கையாளர்களையும் பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், குறித்த நேரத்தில் கடையை திறந்து இரவு மூடிய பின்பும் யாரேனும் ஒரு சின்ன பொருளை கேட்டு வந்தாலும் முகம் கோணாமல் திறந்து எடுத்துக் கொடுத்தால் தன்னுடைய கடையின் மேல் நம்பிக்கை மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

 

QURAN TECHNOLOGY

 

[12] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை டாக்டர் ஷேக் சையது M.D

சின்ன வார்த்தையில் பெரிய அர்த்தங்கள்

கடந்த தொடரில், கருக் குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆண் விந்தணுதான் என்று இறைமறையில் சொல்லப்பட்டிருக்கும்அறிவியல் உண்மையை அதனுடைய ஆதாரத்துடன் பார்த்தோம். இந்த அறிவியல் உண்மை நபி மொழியிலும் இடம் பெற்றிருக்கிறது. அது எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதினை உங்கள் முன் தருவதில் பெருமிதம் அடைகிறேன்.

ஒரு குறிப்பட்ட காலத்தில் வாழந்திருந்த ஒரு மனிதரால் எல்லாக்காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேச, எழுத முடியாது, அவரது காலத்திலும், அதனைத் தொடர்ந்த சில காலங்களிலும் வாழ்ந்தவர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் அவரது பேச்சுகள், எழுத்துக்கள் அமைந்திருக்கும். குறிப்பிட்ட காலம் சென்றதும் அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாததாக, அல்லது வார்த்தைப் பிரயோகம் மாறிவிட்டதாக ஆகிவிடுகிறது. அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்காக தனி விளக்கவுரை அவசியப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகள் நமது நடைமுறையில் ஏராளம் உண்டு. இடம் சுருக்கம் கருதி இங்கு எழுதுவதைத் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேசிய வார்த்தைகள், அவரது மொழி பேசும் இன்றுள்ள அனைவராலும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. இது அவர்களது வார்த்தைகளுக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். காரணம் அவர்களது அந்த வார்த்தைகள் வஹி அறிவிக்கப்படாத இன்னொரு குர்ஆனாக திகழ்கிறது. அஹ்மது, மற்றும் அபூ தாவூத் ஆகிய நூட்களில் இடம் பெற்றுள்ள குர்ஆனும், அது போன்ற இன்னொன்றும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய செய்தி இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குர்ஆன் எல்லோரும் புரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப் பட்டுவருவது போல, நபியவர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது இனிமேலும் தொடரும். மேலும் அவர்களது வார்த்தைகளிலிருக்கும் அர்த்தமுள்ள போதனைகள் அனைத்து நாட்டவருக்கும், அனைத்து காலத்தில் வாழ்பவர்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாகவே அமைந்துள்ளன.

குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.

இதனையே அவர்கள் பின் வருமாறு சிலாகித்து கூறுவதைக் கேளுங்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ ، فَوُضِعَتْ فِى يَدِى . رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கினைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு உதவப் பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்கள் கொண்டுவரப்பட்டு, என் கையில் வைக்கப்பட்டன. நூல்: புஹாரி.

இந்த நபி மொழியில் ஒருங்கினைந்த பொருள்களைத் தரும் சொற்கள் என்பதற்கு பல அர்த்தம் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிப் போகாமல் எல்லாக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியான ஒருங்கினைத்த வார்த்தை என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். அதே போல், குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சு என்றும் அதனைப் புரிந்து கொள்ளலாம்.

அதே போல், சாதாரணப் அர்த்தத்தை பிரிதி பலிக்கும் அவர்களது வார்த்தையானது அறிவியல் உண்மையையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல அறிவியல்உண்மைகளையும் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பலஅறிவியல் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள் என்பது வியப்பிலும் மிகப் பெரும் வியப்பாக இருக்கிறது.

அவர்கள் பேசிய அந்த அறிவியல் உண்மைகள் அவர் ஒரு இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களில் மிக முக்கிய ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அன்றைக்கும், இன்றைக்கும் நபிகளாரின் வார்த்தைகளில் உள்ள அந்த அறிவியல் உண்மையை அறிந்தவர்கள் பலரும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருங்கிச் சொல்லி நிறைய கருத்துகள் கூறும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் அமைப்பில் பல அறிவியல் உண்மைகளை மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் எழுதி வரும் கருயியல்அறிவியல் குறித்து அவர்கள் கூறியிருக்கும் ஒரு தகவல். இதோ! அதனை உங்களுக்கு முன் சமர்பிக்கிறேன்.

عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت قائما عند رسول الله صلى الله عليه وسلم فجاء حبر من أحبار اليهود فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يصرع منها فقال لم تدفعني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمىمحمد الذي سماني به أهلي فقال اليهودي جئت أسألك فقال له رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك قال أسمع بأذني فنكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال سل فقال اليهودي أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض والسماوات فقال رسول الله صلى الله عليه وسلم هم في الظلمة دون الجسر قال فمن أول الناس إجازة قال فقراء المهاجرين قال اليهودي فما تحفتهم حين يدخلون الجنة قال زيادة كبد النون قال فما غذاؤهم على أثرها قال ينحر لهم ثور الجنة الذي كان يأكل من أطرافها قال فما شرابهم عليه قال من عين فيها تسمى سلسبيلا قال صدقت قال وجئت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان قال ينفعك إن حدثتك قال أسمع بأذني قال جئت أسألك عن الولد قال ماء الرجل أبيض وماء المرأة أصفر فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله قال اليهودي لقد صدقت وإنك لنبي ثم انصرف فذهب فقال رسول الله صلى الله عليه وسلم لقد سألني هذا عن الذي سألني عنه ومالي علم بشيء منه حتى أتاني الله به رواه مسلم

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஃதவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இறைத்தூதர் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினார். (அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த) நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே என்று நீ சொல்லக் கூடாதா? (முஹம்மதே! என்று பெயர் கூறி அழைக்கிறாயே அதனால்தான் தள்ளினேன்) என்றேன். அதற்கு அந்த யூதர் அவருக்கு அவரின் குடும்பத்தினர் சூட்டிய பெயர் கொண்டுதான் நாங்கள் அழைப்போம் என்று கூறினார். (இதனைக் கண்டு கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஆம்! எனது பெயர் முஹம்மத்-தான் இதுவே எனது குடும்பத்தினர் இட்ட பெயராகும் என்றார்கள்.

பின்பு, யூத அறிஞர் உங்களிடம் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நான் கூறப் போகும் எந்த விஷயமும் உமக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வந்த யூதர். தன்னிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறிக் கொண்டே (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்.

“இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?”, என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்ஸிராத் எனும்) பாலத்தின் அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.

மக்களிலேயே முதன் முதலில் (அப்பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று அடுத்து வினவினார் அந்த யூதர். ஏழை முஹாஜிரீன்கள் (மக்காவைத் துறந்து மதீனா வந்து குடியேறிய அகதிகள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் சுவனத்தில் நுழையும் போது வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று வினவினார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு எனப் பதிலளித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க, சுவனத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப் படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் வினவினார். அதற்கு அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்த போது, நீர் கூறியது முற்றிலும் உண்மையே என்றார் அந்த யூதர்.

பூமியில் வசிப்பவர்களில் ஒர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே உம்மிடம் நான் வந்தேன். என்று கூறினார். நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குழந்தை(யின் பிறப்பு) குறித்து கேட்பதற்காக நாம் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்தணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவை இரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்தணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும், பெண்ணின் நீர் (சினை முட்டை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள். அந்த யூத அறிஞர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஒர் இறைத்தூதர்(நபி)தாம் எனக் கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இவர் எதைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

இந்த நபி மொழியினை சற்று ஆழ்ந்த சிந்தனையோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மையைகளை மிக எளிமையாகவும், அதே நேரத்தில் அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருப்பது தெரியவரும்.

மேலும், குழந்தை உருவாக்கத்திற்கு ஆண் விந்தணுவின் நிறமும், பெண்ணின் மதனநீரின் நிறமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்னொரு நபி மொழியில் ஆணின் விந்தணு கெட்டியாகவும், வென்மை நிறமுடையதாகவும், பெண்ணின் மதன நீர் மெருதுவாகவும், மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாக வேண்டுமானால் ஆணின் விந்து கெட்டியாகவும், வென்மையாகவும் இருக்க வேண்டும். காரணம் அதில்தான் வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும், அதனால் குழந்தை தரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பெண்ணின் விந்து மெருதுவாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அப்போது தோன்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அப்போது தன்னை நோக்கி வரும் உயிரணுவை முழு அளவில் ஏற்றுக் கொண்டு குழந்தை உருவாக காரணமாக அமைகிறது.

ஆணின் விந்து கெட்டி குறைந்ததாகவோ, அல்லது நிறமாறியதாகவோ இருக்குமானால் அவனது விந்துவில் உள்ள உயிரணுக்கள் வீரியம் குறைந்ததாகவும், எண்ணிக்கை குறைந்தாகவும் இருக்கும். அதனால் குழந்தை தரிக்க வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதுபோல், பெண்ணின் விந்து, அதன் தன்மையிலோ, நிறத்திலோ மாறுபட்டிருக்குமானால் குழந்தை தரிப்பதில் தடங்கல்கள் பலவும் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

அடுத்து, இந்த நபி மொழித் தொடரில், இரண்டும் கலந்து விடும் போது என்று நபியவர்கள் கூறியதன் மூலம், குழந்தை உருவாகுவதற்கு ஆண் பெண் ஆகிய இருவரின்விந்துவும் அவசியம் என்பதை எளிமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த உண்மையை கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்றைய அறிவியல் உலகில் யாருமே அறிந்திருக்க வில்லை. அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தியினை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முனைந்தார்கள்.

நபி மொழியில் மோதல் போக்கா?

இந்த நபி மொழியில் சொல்லப்பட்டிருக்கும் தகவலை மேலோட்டமாக படித்துப் பார்க்கும் போது, குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துடன் மோதுவது போன்றும், இன்றைய அறிவியல் உண்மைக்கு மாறு பட்டிருப்பது போன்றும் தோன்றலாம்.

காரணம், குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆணின்விந்தணுதான் என்று குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. இதனையே இன்றைய அறிவியல் உலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், நபி மொழியில் இடம் பெற்றிருக்கும் கருத்து அதற்கு மாறுபட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில், ஆணின் விந்து பெண்ணின் விந்தினை மிகைத்து விட்டால், அப்போது அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை ஆணாகவும், பெண்ணின் விந்து ஆணின் விந்தை மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை பெண்ணாகவும் உருவாகும் என்று கூறும் போது குழந்தையின் பாலைத் தீர்மனிப்பது ஆண்விந்தணுவிற்கு இருக்கும் அதே பங்களிப்பு பெண்ணின் விந்துவிற்கும் உண்டு என்றுதானே விளங்குகிறது என்று கருத இடம் உண்டு.

இது போன்ற ஐயங்கள் தோன்றுவதற்கு காரணம் இந்த நபி மொழியின் சரியான பொருளை சரிவர புரிந்து கொள்ளாமையே. எனவே, இந்த நபி மொழியின் பொருளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நபி மொழி, இன்னொரு நபி மொழிக்கு விளக்கமாக அமைகிறது என்பதால், கருயியல் குறித்து வந்திருக்கும் வேறு நபி மொழிகளையும் பார்க்க வேண்டும். அப்போது மேற் கூறப்பட்ட நபி மொழி எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

இது குறித்த விரிவான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு, பெண்ணின் கருவறை அமைப்பினையும், அங்கு எவ்வாறு கருத்தரிக்கிறது, கருத்தரிக்கும் போது அங்கு என்ன என்ன நிகழ்கிறது என்பது குறித்து புரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். அப்போதான் இந்த நபி மொழியின் பொருளை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

 

QURAN TECHNOLOGY

 

[13] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை டாக்டர் ஷேக் சையது M.D

இராக்கின் மீது பொருளாதாரத் தடையும், இறைத் தூதரின் முன்னறிவிப்பும்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து மிகத் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் பலவும் அவர்கள் காலத்திலேயே நடந்து இருக்கிறது. மற்றைய அவர்களது முன்னறிவிப்புகள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் நேருக்கு நேர் கண்டு வருகிறோம்.

மறுமை நாள் ஏற்படும் வரை நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள் என்பதை பின் வரும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.

அபூ சயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு பகலன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகையை தொழ வைத்தார்கள். அதன் பிறகு உரை ஒன்று நிகழ்த்தினார்கள், அப்போது மறுமை நாள் தோன்றும் வரையிலும் நடை பெறவிருக்கும் அனைத்து (முக்கிய) நிகழ்ச்சிகள் குறித்தும் எங்களுக்கு முன்னறிவிப்பு செய்தார்கள். அதனை மனனம் செய்து கொண்டவர்களும் உண்டு, மறந்து போனவர்களும் உண்டு. நூல்: திர்மதி.

இதே கருத்துள்ள நபி மொழியினை ஹுதைஃபா(ரலி) அவர்கள், முகீரா(ரலி) அவர்கள் இன்னும் பல நபித் தோழர்களும் அறிவிப்பு செய்துள்ளது முஸ்லிம் மற்றும் இப்னு ஹிப்பான் போன்ற பல நபி மொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.

இராக்கின் மீது பொருளாதாரத் தடை

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதாக முன்னறிவிப்பு செய்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இராக்கின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பற்றிய பின் வரும் அவர்களது முன்னறிவிப்பு:

ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இராக் மக்கள் மீது எதிர்காலத்தில் உணவும், நாணயமும் தடை செய்யப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய போது, அந்தத் தடையை ஏற்படுத்துவோர் யார்? என்று நாங்கள் வினவினோம். அதற்கவர்கள், அந்நிய மொழி பேசுவோர் என்று கூறினார்கள்.

ஷாம் மக்கள் மீதும் எதிர்காலத்தில் உணவும், நாணயமும் தடை செய்யப்படும் என்று கூறினார்கள். அந்த தடையை ஏற்படுத்துவோர் யார்? என்று வினவினோம். ரோம் நாட்டவர்கள் என்று கூறி, சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிறகு கூறினார்கள்: என் சமுதாயத்தில் கடைசி காலத்தில் ஒரு கலீஃபா தோன்றுவார் அவர் செல்வத்தை கணக்கின்றி (ஏழைகளுக்கு) வாரி, வாரி வழங்குவார்…. நூல்: முஸ்லிம்.

இந்த நபி மொழியில், அந்நிய மொழியினரை குறிக்க அஜ்ம் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த அஜ்ம் என்ற வார்த்தை அரபு மொழியறியாத அனைவருக்கும் சொல்லப்படும். அதனை அந்நிய மொழி பேசுவோர் என இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்நிய மொழி பேசும் அமெரிக்கர்களால் கி.பி. 1991 ஆண்டு முதல் இராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பற்றிய செய்தியை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மிகத் துல்லிமாக அறிவிப்புச் செய்திருப்பது அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதற்கான சரியான சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. வளைகுடா யுத்தத்திற்குப் பிறகு இராக்கின் மீது ஐ.நா.சபையின் துணையுடன் அந்நிய மொழி பேசுபவர்களால் அநியாயமான முறையில் இராக் மக்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து பேசவோ, கண்டிக்கவோ உலக நாடுகளில் எதுவும் முன் வரவில்லை. மௌனச்சாட்சிகளாக இருந்து வேடிக்கை பார்ப்பதை தவிர அமெரிக்காவை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் திறானியற்றவர்களாக இருந்து வந்ததையும் யாரும் மிக எளிதில் மறந்து விட முடியாது. அதனால் பட்டினிச் சாவுகளும், சிகிச்சைக்கு மருந்துகளின்றி நோயுற்று மடிந்தவர்களும் ஏராளம். பிறப்பின்றி இறந்துவிட்ட சிசுக்களின் எண்ணிக்கையோ அதைவிட ஏராளம். உலக மனசாட்சியையே உலுக்கிடும் வகையில் ஊனப்பிறவிகளாக பிறந்து, அன்னியர்களின் கொடூரச் செயல்களுக்கு உலக அரங்கில் சாட்சிகளாக விளங்குபவர்கள் அதிலும் ஏராளாம்.

இந்த நபி மொழியின் தொடரில் பொருளாதாரத் தடை ஷாம் நாட்டவர்கள் மீதும் விதிக்கப்படும் என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. அன்றைய ஷாம் என்பது இன்றைய பாலஸ்தீனம், சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

இப்போது பாலஸ்தீனம், சிரியா பகுதியில் நடைபெறும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மனித உரிமைகள் கழுத்து நெறிக்கப்பட்டு குற்றுயிராக இருக்கும் அந்தப் பகுதியில் நியாயம் பேச எந்த நாடுகளும் முன் வரத் தயங்குகின்றன. மனித உரிமைகளை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக் கருதும் உலகச் சட்டாம்பிள்ளை அங்கு நடைபெறும் அக்கிரமங்களுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருந்த காலம் மாறி இப்போதெல்லாம் பகிரங்கமாகவே செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாக அன்னியர்களின் அச்சுறுத்தலுக்கும், பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிய சிரியாவின் மீது விரைவில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற துடித்துக் கொண்டிருக்கிறது அன்னிய அரசு அவர்களது நோக்கத்தை விரைவில் அமுலுக்குக் கொண்டு வருவதற்கு எந்த மோசடியையும் செய்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தத் தடையை ஏற்படுத்துவதில் ரோம் (இத்தாலிய, அதனை அடுத்துள்ள) நாட்டவர்களின் கை ஓங்கியிருக்கும் என்பது நபி மொழியிலிருந்து புரிந்து கொள்ளப்படும் தகவலாகும்.

இராக் தினார்கள் செல்லாக்காசாக ஆகும்:

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இராக் நாணயங்களும், அதன் உணவுகளும் (ஒரு காலத்தில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்த முடியாதபடி) தடுக்கப்படும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

இராக் நாணயம் ஒரு காலத்தில் செல்லத்தக்கதாக இருக்காது, அதனால் அங்கு உணவுப் பொருட்கள் வாங்கும் திறனின்றி மக்கள் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று 1430 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த செய்தியை இன்று நேருக்கு நேர் தொலைகாட்சியின் மூலம் நாம் கண்டு வருகிறோம். அந்நாட்டு நாணயங்கள் தெருவீதியில் கிழித்து எறியப்படும் கோரச்காட்சியும், அதனால் அந்நாட்டு மக்கள் உணவுப் பொருள் வாங்கும் திறனின்றி பஞ்சத்தால் அவதியுறுவதும் அனைவருடைய மனச்சாட்சியையும் அசைத்துப்பார்க்கிறது.

இராக் நாணயம் அந்நாட்டு மக்களால் பயன்படுத்த முடியாத படி தடை செய்யப்படும் என்பதற்கு நாணய வளம் தரும் பெட்ரோல் கிணறுகளை அந்நாட்டு மக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஒரு காலத்தில் ஏற்படும், அப்போது பஞ்சம் தலைவிரித்தாடும் என்று பொருள் கொள்வதற்கும் தடை ஏதும் இல்லை. இதுவும் இன்று இராக்கில் நடை பெறுகிறது.

கருப்புத் தங்கம் அதிகம் விளையும் நாடு:

(மேற்காசியாவில் பாயும்) ஃபுராத் (யூப்ரட்டீஸ்) நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், புஹாரி.

முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள வேறொரு அறிவிப்பில், தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தும், அதனை செவியுறும் மக்கள் அதனை எடுப்பதற்காக அங்கு நோக்கிச்செல்வார்கள், அதனருகில் இருப்பவர்களோ, இவர்களை உள்ளே நுழைவதற்கு அனுமதித்தால், அனைத்தையும் அபகரித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று கூறி அவர்களோடு போரிடுவார்கள், அந்த போரில் நூறில் தொன்னூற்று ஒன்பது பேர் கொல்லப்படுவார்கள் என்று வந்திருக்கிறது.

இந்த ஃபுராத் நதி துருக்கியில் தோன்றி குவைத் வழியாக சென்று அதன் பெரும் பகுதி இராக்கில் பாய்கிறது. பிரபலமிக்க கர்பலாவையும் கடந்து செல்கிறது. தங்கப் புதையல் வெளிப்படும் என்பதற்கு உண்மையிலே தங்கப் புதையல் வெளிப்படும் என்றும் கருதலாம். அது இன்னமும் நடை பெற வில்லை. எதிர்காலத்தில் தங்கம் கட்டியாக கட்டியாக அங்கு வெளிப்படும், அப்போது அதனை எடுப்பதற்காக நடை பெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவார்கள்.

அதே போல் கருப்புத் தங்கமான பெட்ரோல் வளம் எனவும் அதற்குப் பொருள் கொள்ளலாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தவர்களுக்கு பெட்ரோல் பற்றிய ஞானம் அறவே இல்லாதிருந்ததாலும், அவர்களிடையே விலை உயர்ந்த பொருளாக தங்கம் மட்டுமே இருந்து வந்துள்ளதாலும் (தங்கம் அவர்களிடம் விலை மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல நபி மொழிகளில் சான்றுகள் உள்ளன. இது அதற்குரிய இடம் இல்லை என்பதால் தவிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது) பெட்ரோலைத் தங்கத்திற்கு ஒப்பிட்டு தங்கம் என்ற வார்த்தையையும், அது சார்ந்தகருத்துகளையுடைய வார்த்தைகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறு பேசுவது அரபி இலக்கியத்தில் ஒரு வகையைச் சார்ந்ததாகும். அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெட்ரோலைப்பற்றி புரிந்து கொள்வார்கள் என்றிருந்தால் அம்மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் பற்றிய செய்தியினை அன்றே எடுத்துக் கூறியிருப்பார்கள். அது சாத்தியமில்லாததால், மேற் கூறியவாறு அவர்களது வார்த்தைப் பிரயோகம் அமைந்து இருக்கலாம்.

கருப்புத் தங்கமான இந்தப் பெட்ரோல், இன்றைய மனித வாழ்க்கையில் மஞ்சத்தங்கத்தை விட அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. மேலும் ஃபுராத் நதி பாயும் இராக் நாட்டில் உற்பத்தியாகும் கருப்புத் தங்கமான பெட்ரோல், உலகிலேயே மிகவும் தரம் வாய்ந்ததாகும். அதற்கான உற்பத்தி செலவு, மற்றைய நாடுகளில் ஏற்படும் செலவினைவிட பன்மடங்கு குறைவு உலக நாடுகளில் பெறப்படும் பெட்ரோலில் பெருமளவு இராக்கிலிருந்தே கிடைக்கிறது. எனவே, இராக் நாட்டின் மீது உலக நாடுகள் தங்களது பொறாமைக் கண்களின் பார்வையை திருப்பியது. குறிப்பாக உலக சட்டாம்பிள்ளையின் கண்களை உறுத்தியது. எனவே, அங்கு கிடைக்கும் கருப்புத் தங்கத்தை கொள்ளையடிக்க கொள்ளைக் கூட்டத்தினர், இரகசியக் கூட்டை ஏற்பத்திக் கொண்டு எத்தனையோ சதித் திட்டங்கள் தீட்டின. அதனுடைய வெளிப்பாடுதான் இப்போது இராக்கின் மீது தொடுக்கப்பட்ட அன்னியர்களின் அநியாயமான போர். இதற்கான ஐ.நா. சபையின் ஒப்புதல் பெறப்பட வில்லை, உலக நடை முறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இராக்கின் பெட்ரோல் மீது கொண்ட அவர்களது ஆசை, அறிவுக்கண்களை மறைத்து, அவர்களை மிருகங்களாக மாற்றியது. அதனால் நிரபராதியான பல இலட்ச அப்பாவி மக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது போன்ற கொடுமைகளும், சோதனைகளும் நடை பெறும் என்பதால்தான் அங்குள்ள மக்கள் அதனை எடுக்க வேண்டாம் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து செய்திருக்கலாம்.

இந்த நபி மொழியில் அறிவிக்கப்பட்ட செய்தி உறுதிபடும் விதத்தில்தான் இராக் மீது அன்னியன் தொடுத்த யுத்தம் அமைந்திருக்கிறது. உலகினை மிரட்டும் உயிர் கொல்லி பயங்கர ஆயுதங்களையும், பேரழிவினை ஏற்படுத்தும் அணு ஆயதங்களையும் இராக் பதுக்கி வைத்துள்ளது என்ற பொய்யான காரணங்களை புனைந்து, ஐ.நா. சபையின் ஒப்புதல் பெறாமல், உலக நடை முறைகளை மதிக்காமல் அநியாயமாக தொடுக்கப்பட்ட போரின் உள்நோக்கம் கருப்புத் தங்கமான பெட்ரோல்தான் என்பதை உலக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். போர் முடிந்து விட்டது, பேரழிவை ஏற்படுத்தும் உயிர் கொல்லி ஆயதங்களைக் கண்டுபிடித்தார்களோ இல்லையோ, அந் நாட்டில் இருக்கும் பெட்ரோல் கிணறுகளை அவசர அவசரமாகக் ஓசையின்றி கையகப்படுத்திக் கொண்டார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். இதன் மூலம் அவர்களது போலியான முகத்திரை உலக அரங்கில் கிழிக்கப்பட்டு விட்டது. மேலும், பெட்ரோலை விற்பனை செய்யும் அதிகாரம் யாருக்குரியது என்ற குடும்பிச் சண்டை இப்போதே ஆக்கிரமிப்பு படைகளிடையே ஆரம்பமாகிவிட்டது. இந்த யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாடும், இராக்கின் பெட்ரோலில் தங்களுக்கும் பங்கு உண்டு என உரிமை கொண்டாட நினைக்கிறது. உலக சட்டாம்பிள்ளையோ அனைத்தையும் அபகரித்து விட்டு, மற்ற நாடுகளுக்கு நாமம் போட முனைக்கிறது. இதனால் அவர்களிடையே சண்டை மூண்டு, அதற்காக நடை பெறும் அந்தச் சண்டையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியது போல் ஒவ்வொரு நூறு பேரிலும் தொன்னூற்று ஒன்பது பேர் சமீப காலத்தில் கொல்லப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அநியாயக் காரர்கள் அழிந்தே தீருவார்கள் என்பது இறைவன் வகுத்த நியதி. வாய்மையே வெல்லும், அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கு. அதில் எந்த மாற்றமும் செய்ய யாராலும் முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

நாளை நடக்கும் நிகழ்ச்சி அல்ல அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை எந்த மனிதராலும் திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாது எனும் போது, 1430 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு நிகழ்வினை மிகப் புள்ளிவிவரத்துடன் தெளிவாக ஒரு மனிதரால் சொல்ல முடிகிறது என்றால் அவர் ஒரு சராசரி மனிதராக இருக்க முடியாது. சாதாரண மனிதர் என்ற முறையில் அதனை தெரிந்து வைத்திருக்க முடியாது. மாறாக அந்த நிகழ்ச்சியினை நடத்தி காட்டிடும் இறைவனால்தான் அவர்களுக்கு அது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அகில உலக மக்களின் இரட்சகனான அல்லாஹ்வின் தூதுச் செய்தியை சொல்ல வந்த ஒரு இறைத்தூதர் என்ற முறையில்தான் அவர்களுக்கு இது போன்ற செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்க முடியும். நபியவர்களின் இந்த முன்னறிவிப்புகள், அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதர்தான் அவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

எனவே, இன்றைய உலக மக்கள், இறைத்தூதரின் இந்த முன்னறிவிப்புகளை நேருக்கு நேர் பார்த்து, அவர்களின் அறிவிப்பு உண்மையானது என்பதை அறிந்த பிறகாவது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதராகும் என்பதை ஏற்று, இஸ்லாத்தில் இணைந்து, அவர்களின் தூய போதனைகளை தமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மறுமையில் மனிதர்களிடம் நடை பெறும் விசாரணை குறித்தும், அதன் பிறகு மனிதர்கள் செல்லுமிடமான சுவர்க்கம், நரகம் குறித்தும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனைத்தும் உண்மையானதுதான் என முழு மனதுடன் நம்பிக்கை கொண்டு, அதற்கேற்ப நமது செயல்பாடுகளை சீர் செய்து, சுவனம் செல்வதற்குரிய சீரிய வழியினை தேர்தெடுத்து வாழ வேண்டும். நபியவர்கள் இவ்வுலகில் நடக்கவிருப்பதாக கூறியவைகள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டுள்ளது எனும் போது, அவர்கள் மறுமை நாள் குறித்து கூறிய அனைத்தும் நிச்சயம் நடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளலாகாது.

இறைத்தூதரின் ஏற்கப்பட்ட இரண்டு பிரார்த்தனை:

ஒரு நாள் ஆலிய்யா என்ற இடத்திலிருந்து திரும்பி வரும் போது பனூ முஆவியா கூட்டத்தாரின் பள்ளிக்குள் சென்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து தொழுதுகொண்டோம். அங்கு நீண்ட நேரம் தனது இரட்சகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். பின்பு எங்களை நோக்கி, எனது இரட்சகனிடம் மூன்று பிரார்த்தனைகளை முன் வைத்தேன். அதில் இரண்டை ஏற்றுக் கொண்டான். ஒன்றை மறுத்து விட்டான் என்று கூறிவிட்டு, என் சமூக மக்களை பஞ்சத்தாலும், வெள்ளப் பிரளயத்தாலும் ஒட்டு மொத்தமாக அழித்து விட வேண்டாம் என்று கேட்டேன். அந்த இரண்டினையும் ஒப்புக் கொண்டான். மேலும், என் உம்மத்தவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே பிரச்சனை செய்து கொள்ள வைக்காதே என்று கேட்டேன். அதனை மறுத்து விட்டான்.
அறிவிப்பாளர்: சஃத்(ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம்.

வேறொரு அறிவிப்பில், என் சமுதாய மக்கள் தங்களிடையே சண்டையிட்டு, அழிந்து போகும் நிலைக்கு விட்டு விடாதே! என்று பிரார்தனை செய்ததாக வந்திருக்கிறது. இந்தப் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ள வில்லை. இதன் வெளிப்பாடு இன்று இஸ்லாமிய சமூத்தில் மிக தெளிவாகவே தெரிகிறது. இஸ்லாமியச் சமுதாயம் தங்களிடையே சண்டையிட்டு அழிந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஆமீன்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்..